search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரி கடையில் தீவிபத்து"

    திருச்சியில் தீ விபத்தில் கருகிய பேக்கரி கடை அதிபர் மனைவி பலியானார். அவரது கர்ப்பிணி மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் பால சேகர் (வயது 50). இவர் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி மல்லிகா (48). இவர்களுக்கு சுவாதி (27) என்ற மகள் உள்ளார்.

    நேற்று இரவு பாலசேகர் வெளியில் சென்றுவிட்டு கடையை பூட்டுவதற்காக வந்தார். அப்போது கடைக்குள் இருந்து புகை வந்தது. அதிர்ச்சியோடு உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்கு உள்ளே பிரிட்ஜ் இருந்த அறையில் மனைவி மல்லிகாவும், மகள் சுவாதியும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் காப்பாற்றிய பாலசேகர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் தாய் மல்லிகாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மல்லிகா இன்று காலை 7 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    உடல் கருகிய சுவாதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடலில் 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் மல்லிகா அவரது மகள் சுவாதியுடன் உயிரோடு எரிக்கப்பட்டாரா? என்று சந்தேகம் எழுந்தது.

    ஏனென்றால் சுவாதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் தங்கவேல் என்பவருக்கும் காதல் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இது சுவாதியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் இரண்டு குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தனித்தனியாக தங்களது வீடுகளில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் ரகசிய திருமணம் செய்த சுவாதி கர்ப்பமான நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு தாய் மல்லிகாவுக்கு உதவியாக பேக்கரியில் இருந்தபோது தான் இருவரும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த சம்பவத்தில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கலாமோ? என போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய் மல்லிகா முதலாவது மேஜிஸ்திரேட் நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில் நேற்று இரவு 10 மணிக்கு பேக்கரியில் இருந்த பிரிட்ஜை அணைப்பதற்காக சுவிட்சை ஆப் செய்தபோது திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் இருவரும் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார். மரண வாக்குமூலம் அளித்த அவர் இன்று காலை பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுவாதியை காதல் திருமணம் செய்ததாக கூறப்படும் ஆயுதப்படை போலீஸ்காரர் தங்கவேலுவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×